Translate

Friday, April 30, 2010

மருத்துவ குறிப்புகள்

பல் வியாதிகள் - பாதுகாப்பு சிகிச்சைகள்

மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.
ஈறு நோய்கள்:

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளி வரும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் ஆகிறது. அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம்தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ் நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவைகளாகும்.
பொதுவாக் பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக்கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து அது கெட்டியாகி காரையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை
வருடத்திற்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்காரை அகற்றி பற்களை பாதுகாக்க வேண்டும். மேலும் Ultra Sonic Scaler என்ற நவீன கருவி மூலம் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
பல் சொத்தை
பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.
பல் சொத்தைக்கான சிகிச்சை
சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின் அழகு பாதுகாக்கப்படும்.
பல்சீரமைப்பு
பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்குக் காரணம் குழந்தை சிறு வயதில் உள்ளபோது விரல் சூப்புவதாலும், பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நாக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும், வாய் திறந்தே தூங்குவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
பல் சீரமைப்புக்கான சிகிச்சை
பொதுவாக கிளிப்புகள் மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்திற்குத் தள்ளப்படுவதால் பல்வரிசை சீராக அமையும்.
பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.
பல் சொத்தை, பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (RCT) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.
பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடி, புகையிலை, கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.
வாயில் ஏற்படும் கட்டி, புண் முதலியவற்றைப் பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருப்பது மாறுகண் எனப்படும்.
சிலருக்கு மாறுகண் எப்போதும் இருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.
மாறுகண் உடைய குழந்தைகள் பார்க்கும் போது, ஒரு கண் நேராகவும், மறு கண் உட்புறமோ, வெளிப்புறமோ, மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருக்கலாம்.
உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பலுற்ற கண் என்ற நிலை உருவாகி நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும்.
மாறுகண்ணின் காரணங்கள்

பரம்பரையாக வருதல்
கண்தசைகள் பாதிக்கப்படுதல்
கண் தசைகளுக்கான நரம்பில் கோளாறு ஏற்படுதல்
கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் விழித்திரை கோளாறு, கண் நரம்பு கோளாறு, புற்று நோய்க் கட்டிகள், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவற்றால் ஏற்படும் குறைவான பார்வை
காயம்படுதல்
அறிகுறிகள்

ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருக்கலாம்.
பார்வையில் குறைபாடு இருக்கலாம்.
பிரகாசமான வெளிச்சத்தில் ஒரு கண்ணை மட்டும் மூடிப் பார்க்கக் கூடும்.
இரண்டு கண்களையும் இணைத்துப் பார்க்க முயற்சிக்கும் போது தலையைச் சாய்த்தோ அல்லது திருப்பியோ பார்ப்பது போன்ற அறிகுறிகளும் சில சமயங்களில் தென்படலாம்.
சில சமயங்களில் பார்க்கும் பொருள் இரண்டாகத் தெரியலாம்.


மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியல்ல. அது உங்கள் குழந்தையின் பார்வையையும் தோற்றத்தையும் பாதிக்கும்.
சிறு குழந்தைகளுக்கு மாறுகண் இருந்தால் இரண்டு வயதிற்குள்ளேயே உரிய சிகிச்சை அளித்தால் நிரந்தரமான பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.
குழந்தை வளர்ந்த பிறகு, சிகிச்சை மூலம் வெளித்தோற்றத்தை மட்டுமே சரி செய்யலாம். இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியாது.
நிரந்தர பார்வையிழப்பைத் தவிர்க்க சிகிச்சை முறைகள்

1. தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் ஏற்படும் மாறுகண் உள்ளவர்களுக்கு தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.
2. கண்களுக்கு பயிற்சி: மாறுகண் இல்லாத நல்ல பார்வையுடைய கண்ணை மறைத்து, மாறுகண் உடைய கண்ணால் பார்க்க வைப்பதன் மூலம், அந்த கண்ணின் பார்வையை மேம்படுத்தலாம். 3. அறுவை சிகிச்சை:

நல்ல கண்ணை மூடி, மாறுகண்ணால் பார்க்க வைக்கும் பயிற்சி மற்றும் தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம், பார்வை மேம்பட்ட பிறகு மாறுகண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் .
மயக்க மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, அந்த சமயத்தில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கக் கூடாது.
ஒரே சமயத்தில் இரண்டு கண்களிலுமோ அல்லது ஒரு கண்ணில் மட்டுமோ அறுவை சிகிச்சை செய்யலாம்.
விழி வெண்படலத்தில், அதாவது விழிக்கோளத்தின் வெள்ளைப் பகுதியில்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும்.
அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.
இந்த அறுவை சிகிச்சை செய்வதோடு சிகிச்சை முடிந்து விடுவதில்லை. தெளிவான பார்வையைப் பெறத் தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டியிருக்கலாம். நல்ல நிலையில் உள்ள கண்ணை மறைத்து, மாறு கண்ணால் மட்டும் பார்க்க வைக்கும் பயிற்சியை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் நீடிக்க வேண்டியிருக்கலாம்.

தொழு நோய்...

தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குத் தெரியாத கிருமியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன் என்பவர் கண்டுபிடித்தார்.

சாதாரணமாக இது மனிதரின் மூலமே பரவுகிறது. தொழு நோய்க்கான சிகிச்சை பெறாத அதிகக் கிருமியுள்ள நோயாளி தும்மும் போதும் , இருமும் போதும், காறித் துப்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந்நோய் பரவுகிறது. தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 வருடம் முதல் 5 வருடம் வரை ஆகும். இதை "Incubation Period" என்று கூறுவர்.

இது மற்ற தொற்று வியாதிகளைப் போல் எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் அதிக தடுப்புச் சக்தி உள்ளவர்களை அதிகமாகத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட அளவை விடக் குறைவான தடுப்பு சக்தி உள்ளவர்களுக்கே இந்நோய் வருகிறது. ஒவ்வொருவரின் தடுப்பு சக்திக்கேற்ப இந்நோயின் வீரியம் வித்தியாசப்படுகிறது.

தொழுநோயா எனச் சந்தேகிக்க உதவும் சில அறிகுறிகள்.

உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல்... அந்தத் தேமல் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்
கை,கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல்.
தோல் தடித்தும் , எண்ணெய் பூசியது போன்ற தோற்றம்
உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்வை இல்லாமல் இருத்தல். அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல்
காது மடல் தடித்திருத்தல்... கண் புருவமுடி உதிர்தல்
கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை.
சிங்க முகம் போன்ற தோற்றம் ( இது தற்போது சாதாரணமாகக் காணப்படுவதில்லை)
பாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல் , பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல்
உள்ளங்கை சதை மேடுகள் சூம்பியிருத்தல்
கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல் , குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல்
கண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல்
முகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல்
மணிக்கட்டு தொங்கி விடுதல்
கணுக்கால் செயலிழந்து போதல்
ஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண்
சட்டையில் பொத்தான் போட முடியாமை , பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.

தொழுநோய் என உறுதி செய்ய
கீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத் திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.
1. உணர்ச்சியற்ற தேமல்
2. நரம்புகள் தடித்துக் காணப்படுதல்
3. தோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.
தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க...

தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.
வலி உணர்ச்சியை குண்டூசி ,பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றால் அறியலாம்.
பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உனர்வு , வலியுணர்வு மாறுதல்களை வைத்து அறியலாம்.
தொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி அதற்கான சிகிச்சையைப் பெற்று விட வேண்டும்.

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோய் என்பது என்ன?
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?
கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4
2. எப்போதும் பசித்தல் – 2
3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4
4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2
5. ஆறாத புண் – 2
6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3
7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2
8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2
9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு - 2
10. மிகக் கூடுதல் எடை – 3
11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2
12. மங்கலான பார்வை – 2
நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்
நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,

பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.
சிறுநீரகங்கள் சேதமடையலாம்
இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்
காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.
உடலுறவில் இயலாமை ஏற்படலாம்
மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
நீரிழிவு நோயின் சிகிச்சையில்
1. உணவுமுறை
2. உடற்பயிற்சி
3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
4. இன்சுலின் பயன்படுத்துதல்
இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.
1. உணவு முறை

சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.
கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.
சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை, வெல்லம்,தேன்,ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மீன்,கோழி , பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?
நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.
நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்
உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி... அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி... குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, மூளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.

நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்... பிரச்சினை உங்களுக்குத்தான்!

இளைய தலைமுறைக்கு..!
-சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா?

- பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா?

- எதற்கெடுத்தாலும் மூக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?'

இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சியுங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்' வரும் அபாயம் உள்ளது.

ஆத்திரப்படும் போது `ஸ்ட்ரெஸ்' அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்' என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, ரத்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.

உணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிப்படை காரணியாக இருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும்போதுதான் அதிக பாதிப்பு இதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம் ஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை' நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும்.

அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ முன்வர வேண்டும்.

சாப்பிட்டவுடன் கடினமான வேலையில் ஈடுபடலாமா?

திடமான உணவு சாப்பிட்டவுடன் கடினமான உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது. இது உடலின் இயல்பான ஆரோக்கிய நிலையை பாழாக்கி விடும்.

வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, சாப்பிட்ட உணவு ஜீரணமாவதற்காக உடலின் பல பகுதிகளில் இருந்து, குறிப்பாக மூளைப் பகுதிகளிலிருந்து ரத்தம் இரைப்பையைச் சென்றடைகிறது. மேலும் அதன் காரணமாக மூளையிலும் பிற உடல் உறுப்புகளிலும் அயர்வு தோன்றும்.

இவ்வாறு உடலின் தலைமை உறுப்பான மூளையும், பிற உறுப்புகளும் அயர்வு கொண்டிருக்கும் நிலையில் பிடிவாதமாக கடினமான உழைப்பில் ஈடுபட்டால் உடல் உறுப்புகளின் இயல்பான செயலாற்றல் குன்றி, அவை நாளடைவில் செயல் திறனை இழந்து விடக்கூடும்.

வயிறார சாப்பிட்ட உடன் தூக்கம் தோன்றுவதற்கு இதுதான் காரணம் என்றும், வயிறு நிறைய உணவு உண்ட காலை சிறிது நேரம் தூங்கி எழுந்திருப்பது கூட நல்லது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்களைப் பேணும் காய்கறிகள்:
நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

லிவர் சிரோசிஸ் - Liver cirrhosis:
மஞ்சள் காமாலைக்கான வைரஸ் கிருமிகள் ஹெபாடைடிஸ் பி வைரஸ் மிக கொடியது. ஆபத்தானது. லிவர் சிரோசிஸ் ஏற்பட இதுவே முக்கிய காரணம். லிவர் சிரோசிஸ் ஏற்பட மற்றொரு முக்கிய காரணம் மதுவகைகள் அருந்துதல் ஆகும்.

ஹெபாடைடிஸ் பி வைரஸ் காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்க்கு தற்போது தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த தடுப்பூசி மூன்று கட்டமாக போடப்படுகிறது. ஹெபாடைஸ் பி வைரஸ் காரணமாக லிவர் சிரோஸிஸ் மட்டுமல்ல புற்று நோய் வரவும் வாய்ப்பு உண்டு.

லிவர் சிரோசிஸ் நோயின் போது -படி படியாக கல்லீரல் செல்கள்பழுதடைந்து வயிறு பானைப் போல் வீங்கி ரத்த வாந்தி ஏற்பட்டு கல்லீரல் முழுவதும் செயல் இழந்துவிடும். இதனால் உயிரிழப்புகூட ஏற்படலாம்.

அலோபதி மருத்துவ முறையில் இந்த லிவர் சிரோஸிக்கு மருந்தே கிடையாது. அவர்களும் மூலிகை மாத்திரைகளையே பரிந்துரை செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் முன்னேற்றம் தெரியாவிட்டால் கல்லீரல் மாற்றி அமைக்கும் ஆபரேசன் செய்கிறார்கள். இது அத்தனை வெற்றிகரமானது மட்டுமல்ல. பண விரயமும் கூட ஆகும்.

கல்லீரலை பாதுகாக்க, கீழா நெல்லி, கரிசலாங்கன்னி,மாதுளம்பழம், நெல்லிக்காய், இஞ்சி, திப்பிலி, சோற்று கற்றாழை மற்றும் கடல் மருந்துகள் இருக்கின்றன.

தண்ணீரே நல்ல மருந்து!

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.

இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.


தண்ணீர் பெரும்பாலான இடங்களில் மிகக் கணிசமாகவே கிடைக்கப் பெறுகின்றன. இரு வழிகளில் தண்ணீர் வரப்பெறுகின்றன. பூமிக்கடியிலும், பூமியின் மேற்பரப்பிலும் (அதாவது மழைநீர்).

மேற்பரப்பு நீர், சாதாரணமாகவே மென்மையாகவும், நிலத்தடி நீர், கடின நீராகவும் இருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால், நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிரம்பவே அடங்கியுள்ளன. கடின நீரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மென்னீர் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும். அதேநேரத்தில் ஒரு முக்கியமான இங்கே நினைவில் கொள்ளவேண்டும், அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போய்விடுமானால் அதுவே உடற் கோளாறுகளை உருவாக்கிவிடும்.


எனவே தான் குடிப்பதற்கும், மருத்துவத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்தும் போது, அதனைச் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.


பல நூற்றாண்டு காலமாகவே பண்டைய எகிப்தியர்கள், ஹீப்ரூக்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய நாட்டவர்களுக்குத் தண்ணீர் பல்வேறு வியாதிகளுக்குப் பிரிக்க முடியாத பிரதான அங்கமாகவே இருந்துள்ளது. ஏசு பெருமானுக்கு முன்னரே, பல நூற்றாண்டு காலமாகவே, தண்ணீரை மருந்தாகவே பயன்படுதியுள்ளனர்.

No comments:

Post a Comment

Govt. Jobs 2020

  Government of Tamil Nadu Jobs 2020 - Survey Assistant Jobs in Chennai Government of Tamil Nadu Chennai, Tamil Nadu via Fresherslive 3 days...